பிள்ளைகளை திணிக்காதீர்கள்


இம்முறை சாதாரண தரம் எழுதிவிட்டு உயர்தரம் செல்ல இருக்கும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமான ஒரு திறந்த மடல்.


இது அனேகமானவர்களால் அடித்து துவைக்கப்பட்ட ஒரு விடயம் என்றாலும் திரும்பவும் ஒரு ஞாபகமூட்டலுக்காக இந்த விடயத்தை பதிவிட நினைக்கின்றேன். 


பெற்றோர்களுக்கு:

1. உங்களிடம் நான் கெஞ்சி கேட்பது, உங்களது பெருமைக்காகவும், பெயர் புகழுக்காகவும் அநியாயமாக உமது பிள்ளைகள் மீது உங்களுக்கு பிடித்த துறையினை திணிக்க வேண்டாம். 


2. கெட்டிக்கார பிள்ளைகள் அனைவரும் Bio மற்றும் Maths தான் படிக்க வேண்டும் என்று இல்லை, அல்லது சாதாரண தரத்தில் சற்று குறைவான அடைவினை அடைந்த பிள்ளைகள் Bio அல்லது Maths படிக்கக் கூடாதென்றும் இல்லை. பெரும்பாலானவர்களுக்கு தெரியும், சாதாரண தரம் என்பது வெறுமனே உயர் தரத்திற்கான ஒரு நுழைவுச்சீட்டே அன்றி அதில் பெரும் சித்தி, எந்த வகையிலும் உயர்தரத்தினை பாதிக்கப் போவதில்லை என்று. 


3. தயவுசெய்து உமது பிள்ளைகளின் உணர்வுகளுக்கும், அவர்களது கனவுகளுக்கும் மதிப்பளியுங்கள் அதனை ஊக்கப்படுத்துங்கள். முட்டாள்தனமாக எனது ஆசை, எனது கனவு என்று உங்களது ஆசைகளை உங்கள் பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். அது அவர்களது வாழ்க்கை. அவன் எடுத்திருக்கும் முடிவு பிழை என்று உமக்குத் தோன்றினால், அதனை எடுத்துச் சொல்லுங்கள்; அவனாகவே மனம் மாறும் வரை. அவனுக்கு பொருத்தமான துறை எதுவென்று சிறுவயதிலிருந்தே அவனை உன்னிப்பாக அவதானித்து அதனை நெறிப்படுத்துவதே ஒரு பெற்றோரின் கடமை. மாற்றமாக உமது ஆசைகளை திணிப்பதென்பது ஆரோக்கியமானதல்ல.


4. தயவு செய்து உமது பிள்ளைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்களது பிள்ளையும் குறிப்பிட்ட இன்னொரு விடையத்தில் ஒரு தனித்துவமானவனாக இருப்பான். அதன்வழி அவனை எடுத்துச் செல்லுங்கள் நெறிப்படுத்துங்கள். அவன் அப்படி செய்கிறான், இவன் இப்படி செய்கிறான் என்பதற்காக அதனையே நாம் நமது பிள்ளைகளுக்கு செய்யப் போனால் முடிவு வித்தியாசமாக கூட இருக்கலாம்.


5. உங்களிடம் பொருளாதார வசதி போதாதென்ற காரணத்திற்காக குறிப்பிட்ட துறைக்கு விடாமல் வேறொரு துறைக்கு விட்டு விட வேண்டாம். தற்போது கல்விக்காக உதவிக்கரம் நீட்ட கூடிய எத்தனையோ தனவந்தர்கள் இருக்கிறார்கள். எந்த முறையிலேனும் முயன்று உங்களது பிள்ளைகளின் கனவினை நனவாக்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பான்.


மாணவ மாணவிகளுக்கு

1. இது உங்களது கனவு, உங்களது இலட்சியம்.நீங்கள் தனித்துவமானவர்; எனவேதான் தயவுசெய்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொருவரை பார்த்து அதன்படி உங்களது வாழ்க்கையையும் எடுத்துச் செல்லாதீர்கள். அதாவது உங்களது நண்பன் குறிப்பிட்ட துறை செய்ய இருக்கிறான் என்பதற்காக நீங்களும் அதனையே செய்ய எத்தனிப்பது முட்டாள்தனமானது. பெற்றோர்களுக்கு உங்களது திறமை விளங்கவில்லை என்றாலும், படிப்பித்த ஆசிரியர்கள் உமக்கு தெளிவான வழிகாட்டல் வழங்காவிட்டாலும் உங்களது மனதுக்கு தெரியும் உங்களுக்கு விருப்பமான விடயம் எதுவென்று. உங்களுக்கு இருக்கும் திறமை எதுவென்று. உங்களுக்கு இருக்கும் கனவு எதுவென்று. அதனை பின்தொடர்ந்து செல்லுங்கள் யாருடைய மூளைச்சலவைகளையும் பொருட்படுத்தாமல்.


2. பெற்றோர்கள் உமது இந்த முடிவிற்கு எதிராக நின்றால், அவர்களுடன் உட்கார்ந்து நிதானமாக ஆலோசியுங்கள். உங்களது கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள். அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு விளங்காத உங்களது திறமைகள் அவர்களுக்கு விளங்கி இருக்கலாம். அவர்களது ஆலோசனை சரியாக பட்டால் அதனை எடுத்துக்கொள்ளுங்கள்.


3. ஒரு குழப்பமான அல்லது இரண்டு மனநிலையில் ஒரு துறைக்கு செல்லாதீர்கள். நிச்சயமாக அதனது முடிவு பயங்கரமாக இருக்கும். எனவேதான் ஆரம்பத்திலேயே உங்கள் முடிவினை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது முழு உழைப்பையும் அதனில் செலுத்துங்கள். யார் என்ன சொன்னாலும், அதாவது இந்தத் துறையில் மிகக் குறுகிய வாய்ப்புகளே உள்ளன என்றும் இதனை படித்தவர்கள் தங்கள் துறைகளில் சரியான அடைவினை அடையவில்லை என்று கூறினாலும், அதனைப் பொருட்படுத்தாமல் உமது இலக்கினை நோக்கிய பயணம் மிகத் துணிச்சலாக இருக்க வேண்டும்.


4. ஒரு முக்கியமான விடயம், பல்கலைக்கழகம் மட்டும் தான் உமது வாழ்க்கை என நினைத்து விடாதீர்கள். இப்பொழுது எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. நான் இங்கே பல்கலைக்கழகம் செல்ல வேண்டாம் என சொல்லவில்லை. பல்கலைக்கழகம் தான் நமது இலக்கு. அல்லாஹ்வின் நாட்டம் அவ்வாறு இல்லை என்றால், நீங்கள் தயவு செய்து துவண்டு விடாதீர்கள். இப்பொழுது எல்லா துறைகளுக்கும் பல்வேறுபட்ட பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. இதற்கான ஆலோசனையை உமது துறையில் குறிப்பிட்ட அடைவினை எட்டியுள்ள ஒருவரிடம் ஆலோசனை செய்து கொள்ளலாம். நான் அதனையே செய்ய வேண்டும் என்றும் சொல்லவில்லை. பல்வேறு தரப்புகளின் ஆலோசனைகளைப் பெற்று, உமக்கு சரி என படுவதை நீங்கள் செய்து கொள்ளலாம் என்றே கூறுகிறேன். நீ தேடல் உடையவனாக இருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்யக் கூடியவனாக இருக்க வேண்டும். உனது கனவுக்காக அடம்பிடிக்க கூடியவனாக இருக்க வேண்டும். 


5. 13 வருட கால முயற்சியின் இறுதிக்கட்ட அறுவடையே இந்த உயர்தரப் பரீட்சை என நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 


6. உங்களுக்குப் பிடித்த ஆசிரியரை தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு மட்டுமே உள்ளது. உங்களுக்கு யாரின் கற்பித்தல் பிடித்தமாக இருக்கிறதோ அவரிடமே செல்லுங்கள். மறந்துவிட வேண்டாம், உயர்தரத்தில் பெரும்பாலான பங்கு சுயகற்றலிலேயே தங்கியுள்ளது. நீ அதிகமா செய்யும் மீட்டலும் பயிற்சியும் சிறந்த ஒரு அடைவிற்கு வித்திடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு