மரணத்தை விட கொடுமையான விஷயம் எது தெரியுமா
https://chat.whatsapp.com/Dh88ytneIkC62uz5thc26Q
மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா?......
வாழ்ந்து கெட்டவர்கள், வாழ்வை தொடர நேரும் அவலம். அதை விட கொடூரமான விடயம் எதுவுமில்லை.
பதினான்கே படங்களில் நடித்து "சூப்பர் ஸ்டார்" முத்திரை பதித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.
பாகவதரைப்போல் வாழ்ந்தவருமில்லை; வீழ்ந்தவருமில்லை. அரண்மனை போல மாளிகை. தங்கத்தட்டில் சோறுண்டவர் பாகவதர்.
எங்கு சென்றாலும் மொய்க்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள். தமிழகத்தில் பல பெண்கள் பாகவதர் பித்துப்பிடித்து அலைந்த காலம்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை கண்டு, கண்பார்வை இழந்து, சின்னாப்பின்னமாகி முடிந்தது அவரது வாழ்க்கை.
வாழ்க்கையின் அபத்தங்களை பலரது வாழ்வில் காணலாம். என்றாலும் கலைஞர்கள் வாழ்க்கையில்தான் விதி கொலை தாண்டவமாடும்.
கீழுள்ளவை கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்......
"அடக்கமாகும் வரை அடக்கமாக இரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள் .
(1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!"
இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?
(2) ஒரு கம்பெனியில் பாட்டு "கம்போஸிங்". எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் "ஹாய் வாலி ..!" என்று இறங்கி வருகிறார்.
சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?
(3) என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி. என்னைப் பார்க்க வந்தவர், "வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்" என்று மெல்லிய குரலில் சொன்னார்.
(4) சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.
ஓடிப் போய் அவரருகே சென்று, "நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.
"ஓ நீங்கதான் அந்த வாலியா..?" என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.
அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.
காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-
(1) கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், "கண்ணகி" க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு.இளங்கோவன்.
(2) என்னிடம் சிகரெட் கேட்டவர் "மாடி வீட்டு ஏழை" யான திரு.சந்திரபாபு அவர்கள்.
(3) நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.
(4) எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் - தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.
இவர்களைவிடவா நான் மேலானவன்?
அன்று முதல் நான், "நான்" இல்லாமல் வாழப் பயின்றேன்.!
எதுவும் மரணம் வரைதான். இதுதான் மனிதவாழ்க்கை.
இருந்தாலும் வாழ்ந்து கெட்டவர்களின் துயரம் மரணத்தைவிட கொடூரமானது.
சமயங்களில் மரணம்தான் விடுதலையோ என்று ஏங்க வைத்து விடுமளவு குரூரமானது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later