பணத்தை எப்படி செலவு செய்கிறோம்


#பணத்தை எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதைவிட எப்படி செலவளிக்கிறோம் என்பதில் கவனம் கொள்ளுங்கள்.  

ஒரு கல்லூரி மாணவி ஒருவர் தன் #நண்பர்களுக்கு_ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார்.  

அப்பா, எவ்வளவு வேண்டும்?  

என்று கேட்டார். ஐந்து பேர் போகிறோம்.  

4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்றார் மகள்.


வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா?  

என்று வியந்த அப்பா,  

என்னிடம் இப்போது இல்லை.  

ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன் என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.  

எனக்கு இப்போதே பணம் வேண்டும் என்று கேட்டார்.


அவ்வளவு தொகையை ஒருநாள் மதிய விருந்துக்கு செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் படிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்று உனக்கே தெரியும். நம் குடும்ப நிலைமையை மீறித்தான் உன் படிப்பு செலவை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவசியமானதற்கு செலவழிக்கலாம். ஆனால், ட்ரீட் என்ற பெயரில் அனாவசிய செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நீ இந்தக் காலத்துப் பெண். உன் விருப்பத்தையும் மறுக்க என்னால் முடியாது.  

ஆகையால் குறைந்தது மூன்று நாட்களாவது பொறுத்துக் கொள் என்று அப்பா சொன்னார்.


மகள் அதை ஏற்காமல் பதிலுக்குப் பேச, அப்பா அதற்கு விளக்கம் கொடுக்க,  

அது காரசாரமான விவாதமாகி விட்டது. கடைசியில் மகள், நான் யாருக்கும் ட்ரீட் கொடுக்கலை. ஆனா நான் மட்டும் யாராவது ட்ரீட் கொடுத்தா வெட்கமே இல்லாம நல்லா தின்னுக்கிறேன். இப்ப உங்களுக்குத் திருப்தியா?  

என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே போனார். அப்பாவின் குரல் பின்னால் கேட்க, அதை அலட்சியம் செய்துவிட்டு வெளியே போனார்.


நகரத்தில் இலக்கே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார். அவசரத்தில் மொபைல் போனையும் எடுத்து வரவில்லை. அது மாலைப் பொழுது ஆனதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இங்கும் அங்கும் சுற்றியதில் பசித்தது. பைக்கை ஒரு டீக்கடை அருகே நிறுத்தினார். பெரிய சாலையின் ஓரம் பெரிய நடைபாதை. நடைபாதையை ஒட்டி டீக்கடை இருந்ததால் பலர் அந்நடைபாதையில் நின்று கொண்டு பொறுமையாக டீ குடிக்க வசதியாய் இருந்தது. இவர் ஒரு டீயும் வடையும் வாங்கிக் கொண்டார்.


அப்போது அங்கே மூன்று ஆட்டோக்கள் வந்து நின்றன. ஒவ்வொரு ஆட்டோவிலும் ஆண்களும் பெண்களுமாய் பலர் நெருக்கியடித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தினர் என்று அவர்கள் பேசுவதை வைத்துத் தெரிந்து கொண்டாள்.


அதில் ஓர் இளைஞன் உற்சாகமாய் டீக்கடையில் வந்து தட்டு தட்டாக சமோசாக்களும், உளுந்து வடைகளும் வாங்கி வாங்கி ஆட்டோவில் இருப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். சட்னியை அவர்கள் இருக்கும் இடத்துக்கே எடுத்து வந்து ஊற்றினான். சமோசாக்களுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் தேவைப்பட்டபோது எடுத்து வந்து ஊற்றிக் கொண்டிருந்தான். அவர்கள் அரட்டையடித்தபடி சாப்பிட்டார்கள்.


எல்லோரும் சாப்பிட்டபிறகு அந்த இளைஞன் பணம் கொடுத்தான். 500 ரூபாய்க்கும் குறைவாகவே ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 15 பேருக்கு 500 ரூபாய்க்குள் அவன் ட்ரீட் வைத்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். ஆனால் அவர்கள் அனைவரும் உற்சாகமாய் இருந்தார்கள்.  

  

‘பணம் செலவழிப்பதற்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே உற்சாகமாய் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ‘எவ்வளவு செலவழிக்கிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்படி ஆழ்மனதில் இருந்து ரசித்து செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்பதையும் உணர்ந்தார். ‘நண்பர்களுக்கு பெரிய உணவகத்தில்தான் ட்ரீட் வைக்க வேண்டும் என்று போலித்தனமான கௌரவம் பார்த்து அப்பாவை வேறு மனக்கஷ்டப்படுத்தி விட்டோமே’ என்று வருந்தினார்.


அவசரமாக வீட்டுக்குத் திரும்பியவர், பைக்கை நிறுத்திவிட்டு அப்பாவிடம் ஓடிச் சென்றார். மகளைப் பார்த்து பதறிய அப்பா, ‘‘எங்கம்மா போனே? கவலைப்படாதே! நீ கேட்ட பணம் ரெடி பண்ணிட்டேன். ஆனா இனிமே எப்பவுமே இப்படி கோபத்துல பைக்கை எடுத்துக்கிட்டு கிளம்பாதே. அப்பாவுக்கு ரொம்ப பயமா இருக்கு’’ என்றார். அவர் அப்படிச் சொல்லும்போது ஒரு குழந்தையாகத் தெரிந்தார்.


‘‘இல்லப்பா! ட்ரீட்டுக்கு இவ்வளவு பணம் வேணாம். நான் என் ஃப்ரெண்ட்ஸை வீட்டுக்குக் கூப்பிடப் போறேன். நானே சமைச்சி நம்ம வீட்டு மொட்டை மாடில நண்பர்களுக்கு விருந்து வைக்கப்போறேன்’’ என்ற மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அப்பா.


‘உலகம் இவளுக்கு ஏதோ நல்லதாய் கற்றுக் கொடுத்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டார். ‘‘சாப்பிடுங்கப்பா, ருசியா இருக்கு’’ என்று அப்பாவுக்காக வாங்கி வந்திருந்த சமோசாவை நீட்டினார் அந்த அன்பு மகள்.எது தேவை,அந்தத் தேவையை சிக்கனமாக எப்படி கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.பெற்றோரின் நிலையைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.பெற்றோர் உங்கள் மனம் கோணக்கூடாது என்பதற்காக பணம் ரெடி செய்துகொடுத்துவிடுவார்கள்.  

ஆனால் நீங்கள் தான் எது அவசியம்,  

எது அனாவசியம்,ஆடம்பரம் என்பதைப் புரிந்து செலவிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.இதுவும் எதிர்கால உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய "பணத்தை திறம்பட நிர்வகிக்கும் கலையே" என்பதை மனதில் கொள்ளுங்கள்.பெற்றோரும் இதை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்து புரிய வைக்க வேண்டும். இருவருமே சிந்திக்க வேண்டிய விஷயம் இது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு