மருத்துவமே மலிந்து போனது
மருத்துவ துறை நலிந்து போய் விட்டது
மலிந்து போய் விட்டது
மரியாதை இல்லை
முன்பைப் போன்று பொன் காய்க்கும் மரமாக இது இல்லை
கல்லடி பட வேண்டியிருக்கிறது
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை
அதனால் மருத்துவம் படிக்க வராதீர்கள்
வேறு பல தொழில்கள் இருக்கின்றன
என்ற கூற்று மருத்துவர்களிடையேவும் பரவலாக பேசப்படுகிறது
இதிலிருந்தும் நான் மாறுபட விரும்புகிறேன்
இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விடவும் அரசு மருத்துவக்கல்லூரிகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ் நாடு.
இதன் விளைவாக ஆண்டுதோறும் 7400 மருத்துவர்கள் வெளிவருகிறார்கள்
இவர்களன்றி ரஷ்யா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளில் எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவர்கள் சேர்த்து மொத்தம் 8000-10000 பேர் வருடந்தோறும் புதிதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்கின்றனர்
இங்கு ஒவ்வொரு 250 பேருக்கும் ஒரு மருத்துவர் இருக்கிறோம்.
நாட்டின் சராசரியை விடவும் பல மடங்கு அதிகமான மருத்துவர்கள் இங்குண்டு
சரி..அதனால் மருத்துவர்களுக்கு வேலையின்றிப் போய் விடும் நிலை வந்துவிடுமா? என்று கேட்டால்
அப்படியான நிலை வராது என்றே பதில் வரும்
காரணம் மக்கள் தொகை வளர்ச்சி
2018 இல் தமிழ்நாட்டின் மக்கள் தொகை
8.12 கோடி
2020இல் மக்கள் தொகை
8.37 கோடியாக கூடியிருக்கிறது
கடந்த ஒரு தசாப்த காலத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை 15% அளவு அதிகரித்திருக்கிறது.
இந்த அளவு அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் , செவிலியர்கள் , இதர மருத்துவ ஊழியர்களின் தேவையும் அதிகரிக்கின்றது
எனவே மருத்துவர்களுக்கான தேவை கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும்
வருமானம் குறையலாம்.
ஆனால் அப்போதும் கூட ஏனைய மற்ற தொழில்துறைகளில் ஊழியர்கள் வாங்கும் ஆரம்ப வருமானத்தை விடவும் மருத்துவம் பயின்ற டாக்டர்கள் வருமானம் அதிகமாகவே இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் இத்தனை அதிக மருத்துவர்கள் இருந்தாலும்
இன்றும் இந்த கோவிட் சூழ்நிலையில் தங்களது மருத்துவமனையில் பணிபுரிய தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்களை அழைக்கும் குறுந்தகவல்கள் நாள்தோறும் வந்து கொண்டுதான் இருக்கின்றன
மருத்துவம் பயின்றால் தமிழகத்தில் மட்டும் தான் பணிபுரிய முடியும் என்ற நிலை இல்லை
மருத்துவம் என்பது அறிவியல்
அதைப்பயின்றவருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு தான்.
இங்கு பொருள் ஈட்டுவது குறைந்தால்
வெளிமாநிலங்கள் செல்லலாம்.
வெளிநாடு செல்லலாம்.
இன்றும் வெளிநாடு சென்று சிறப்பாக பொருள்ஈட்டும் பல நண்பர்கள் எனக்குண்டு.
அவர்கள் அதற்குப்பகரமாக செய்யும் தியாகங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அடுத்து எம்பிபிஎஸ் முடித்து அனைவரும் நகரங்களில் காஸ்மோபாலிட்டன் சிட்டி லைஃப் வேண்டும் என்று நினைப்பதாலேயே தான் நெருக்கடி பிரச்சனை
ஆனால் இன்னும் மருத்துவர் வாசனையே படாத பல பெரிய ஊர்கள் , பல டவுன்கள், பல கிராமங்கள் உள்ளன.
அங்கெல்லாம் சென்று கிளினிக் நடத்தினால் சேவை செய்து கொண்டே மக்களின் நன்மதிப்பைப் பெற்று பொருள் ஈட்ட முடியும்.
இன்னும் தமிழக அரசு குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவர்களை அரசு பணிக்கு அழைக்கிறது
கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்
நடமாடும் மருத்துவ நிலையங்கள்
பள்ளி சிறார் சிறப்பு மருத்துவ குழுக்கள்
தற்போது முதல்வர் அறிவித்திருக்கும்
தனி கிளினிக்குகள் வரை மருத்துவர்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும்.
தமிழகத்தில் இருக்கும் தொற்றா நோய்கள் மற்றும் தொற்றும் நோய்கள் அச்சுறுத்தலை வைத்து கணிக்கும் போது மருத்துவர்களுக்கான தேவை என்பது குறைவதற்கு வாய்ப்பில்லை
எந்த இடத்தில் பணி புரிகிறோம்
யாருக்கு வைத்தியம் பார்க்கிறோம்
எங்கு வாழ்கிறோம் என்பதை பொருத்து மருத்துவர்களுக்கான வரவேற்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்
நான் பார்த்த ஒரு மருத்துவர் பெருநகரம் ஒன்றில் மருத்துவமனை கட்டி பல வருடங்கள் ஆகியும் மக்கள் வரவேற்பு கிட்டவில்லை
அவரே அதே போன்றதொரு மருத்துவமனையை மருத்துவர்கள் அதுவரை ஏரெடுத்தும் பார்க்காத ஒரு கிராமத்தில் கட்டினார்
இப்போது அவர்தான் அந்த சுற்றுவட்டாரத்தில் பிசியான மருத்துவர்.
இப்போது தமிழகத்தின் எட்டுகோடி மக்கள் தொகைக்கு தோராயமாக ஒரு லட்சத்தி இருபதாயிரம் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பான்மையினர்
பெருநகரங்கள்
நகரங்கள் இவற்றைச்சார்ந்தே உள்ளனர்
ஆனால் மருத்துவர்களின் பார்வை ஒரு மாவட்டத்தில் இருக்கும் மக்கள் தொகை லட்சத்துக்குள் இருக்கும் பல டவுன்கள் பக்கம் செல்லுமாயின் சிறப்பான முறையில் ப்ராக்டீஸ் செய்ய முடியும்.
சமீபத்தில் பிரபல யூட்யூபரான ஜோனா ஜின்டனின் வீடியோக்களை பார்த்து வருகிறேன்.
அவர் வாழும் ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் அவர் வசிக்கும் கிராமத்தில் வாழ்வது மொத்தமே எட்டு பேர்.
அவர் வசிக்கும் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பெரிய கிராமத்தில் 80 பேர் வசிக்கின்றனராம்
டவுன் என்றால் 300 பேர் என்றார்.
நான் அதிர்ச்சியாகிவிட்டேன்
இங்கு ஆயிரம் பேருக்கு குறைந்த குக்கிராமம் கிடையாது.
குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேராவது ஒரு டவுனில் இருப்பார்கள்.
நமது மூலதனம்
நமது பலம்
நமது நம்பிக்கை அனைத்தும்
நமது மக்கள் வளம் தான்.
எனவே யாருக்கெல்லாம் மருத்துவ வசதி கிடைக்கவில்லையோ அவர்களை நோக்கி சென்று அங்கு நமது இருப்பை நிருவ வேண்டும்
நிச்சயம் நீட் என்பதற்கு மாற்று என்பது அது இல்லாமல் போவது தானே தவிர
மருத்துவராகும் கனவுடன் இருப்பவர்களை
நீ மருத்துவராகாதே
உன்னால் சம்பாதிக்க முடியாது.
இந்த பாதை கொடூரமானது
என்று அச்சமூட்டுவதன்று...
இன்று நான் நடந்து செல்லும் பாதையில் முள் இருந்தால் அதை களைவது எப்படி என்று தான் நம் பிள்ளைக்கு கற்றுத்தர வேண்டுமே அன்றி
இந்தப்பாதையில் நீ வராதே
வேறு பாதையில் செல் என்று அவர்களின் கனவை நசுக்குவது
முறையன்று....
பணம் சம்பாதிப்பது
இத்தனை ஏச்சு பேச்சுகளை வாங்குவது
வாழ்க்கையை நடத்த போராடுவது
இத்தனையையும் தாண்டி
மருத்துவராக வாழ்வது ஒரு சுகம்
யாம் பெற்ற அந்த இன்பத்தை
பிறரும் பெறத்தான் நாம் எண்ண வேண்டும்
அதற்கான விலையை கொடுத்துத்தான் அதைப்பெற வேண்டும்.
கர்ப்பமாக இருந்து பிள்ளை பெறும் தாய்
"ஐயோ..இந்த வலி என்ன கொடுமையாக இருக்கிறது. இனி தயவு செய்து யாரும் குழந்தை பெறாதீர்கள் " என்று கூறுவாளா?
தாயாக கொடுக்கும் விலை பெரிது
ஆனால் தாய் என்ற அந்த நிலை அதனினும் பெரிது
மருத்துவராகக் கொடுக்கும் விலை பெரிது
ஆனால் மருத்துவர் என்ற நிலை அதனினும் பெரிது.
என் அன்புத்தம்பி தங்கைகாள்
கனவு காணுங்கள்
மருத்துவராக வேண்டுமென்று
பலிக்கும்
உங்கள் கனவுகளில்
இந்த நாடு ஒளிபெறும்...
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later