கோரோன தடுப்பூசி ஒரு பார்வை
கொரோனாவுக்கு எதிரான
தடுப்பூசி குறித்த பார்வை
BNT162b2 தடுப்பூசி
நேற்றைய பொழுது முகநூல் தொடங்கி ட்விட்டர் மற்றும் ஏனைய பல இணைய தளங்களில்
"ஃபைசர்(Pfizer) மற்றும் பயோஎன்டெக் ( BioNTech) கண்டறிந்துள்ள தடுப்பூசி
90% சிறப்பாக வேலை செய்கிறது" என்ற செய்தியைக் காண முடிந்தது
ஃபைசர் என்பது அமெரிக்காவில் இருந்து இயங்கும் உலகின் மிக முக்கிய மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமாகும்
BioNtech என்பது ஜெர்மனியில் இருந்து இயங்கும் மருத்துவத்துறையில் உயிர் தொழில்நுட்பத்தை புகுத்தி அதனைக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்து புதிதாக மருந்துகள் தீர்வுகளைக் கண்டறியும் நிறுவனமாகும்.
அப்படியே ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் பார்த்தால்
இவை இரண்டும் முதல் உலகப்போரின் எதிரி நாடுகள்.
இரண்டாம் உலகப்போரிலும் அதே நிலை தான்.
ஆனால் இன்று அறிவியல் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிராக புதிதாக ஒன்றைக்கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்திருப்பது சிறப்பு.
💉அவர்கள் கண்டறிந்துள்ள தடுப்பூசி எந்த வகையைச் சேர்ந்தது??
இவர்கள் கண்டறிந்துள்ள தடுப்பூசி mRNA வகையைச் சேர்ந்த தடுப்பூசியாகும்.
💉 அது என்ன mRNA தடுப்பூசி?
எந்திரன் படத்தில் எப்படி ஒரு சிட்டி ரோபோ பல சிட்டிகளை உருவாக்க ரெட் சிப் உபயோகப்பட்டதோ அதைப்போல
ஒரு வைரஸ் தன்னைப்போன்ற பல வைரஸ் பிரதிகளை உருவாக்க mRNA ( messenger RNA) தேவை
கொரோனா விசயத்தில் அது ஒரு RNA வைரஸ்.
அது மனித உடலுக்குள் சென்று அங்குள்ள செல்களினுள் அதன் mRNA மூலம் பிரதிகளை உருவாக்கி தொற்றை ஏற்படுத்துகின்றன.
இதே தொழில் நுட்பத்தைத்தான் இந்த வகை தடுப்பூசிகளும் கடைபிடிக்கின்றன.
ஆனால் வைரஸில் இருந்து mRNA மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு அதிலும் குறிப்பிட்ட மூலக்கூறை மட்டுமே இந்த தடுப்பூசி பயன்படுத்துவதால் தடுப்பூசி போடுவதால் தொற்று ஏற்படும் அபாயம் (vaccine associated/induced infection) மிக மிக குறைவு. மேலும் தேவையற்ற விரும்பத்தகாத விரும்பத்தகாத நிகழ்வுகளும் இதில் குறைவாக இருக்கும்.
எனவே இவ்வகை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெகு விரைவாக தடுப்பூசிகளை தயாரிக்க முடியும்.
💉 ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியின் சாதக பாதகங்கள் என்ன ???
ஃபைசர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது
"இந்த தடுப்பூசி 90% திறனுடன் கொரோனாவை தடுக்கிறது"
இது மருத்துவ அறிவியலுக்கு சிறந்த நாளாகும்" என்று அறிவித்துள்ளது.
ஆனால் இது இந்த தடுப்பூசி கொண்டு நடந்து வரும் மூன்றாம் கட்ட பரிசோதனையின் ( phase III trial) இறுதி முடிவன்று.
இது ஒரு இடைப்பட்ட முடிவாகும். ( Interim result)
அமெரிக்கா
ஜெர்மனி
பிரேசில்
அர்ஜெண்டினா
தென் ஆப்பிரிக்கா
துருக்கி ஆகிய ஆறு நாடுகளில்
43,500 தன்னார்வலர்கள் கலந்து கொண்டிருக்கும் இந்த ஆய்வில்
முதல் தடுப்பூசி
அதற்கடுத்து மூன்று வார இடைவெளியில்
மற்றொரு முறை தடுப்பூசி போடப்பட்டு அதற்கடுத்த ஏழு நாட்களில்
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு சக்தி உண்டாகியிருப்பதாக ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளது.
இருப்பினும் இந்த முடிவு கொரோனா தொற்று உண்டான முதல் 94 தன்னார்வலர்களின் தன்மையை மட்டுமே வைத்து கூறப்பட்டிருப்பதால் நாம் முழு முடிவு வரும் வரை காத்திருப்பதில் தவறில்லை
மேலும் ஃபைசர் நிறுவனம் கூறும்பொழுது
" இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த முழுத்தகவல்கள் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தனக்கு கிடைக்கும். அதன் பிறகு அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் முன் அனுமதியை நாட வேண்டும் . பிறகு தடுப்பூசியை பெருமளவு உற்பத்தி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளது.
இதற்கு முன் ஆகஸ்ட் 2020
இந்த தடுப்பூசியைக் கொண்டு 195 பேரிடம் செய்யப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் ( Phase I clinical trial)
இருபத்தோரு நாள் இடைவெளியில் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுள். இறுதி தடுப்பூசி வழங்கப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு
18-55 வயதுக்குட்பட்ட தன்னார்வலர்களுள் இயற்கையாக கொரோனா தொற்று அடைந்தவர்களை விட
3.8 மடங்கு அதிகமாக கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதும்
65-85 வயதுக்குட்பட்டவர்களுள் இயற்கையாக தொற்று அடைந்தவர்களை விட 1.6 மடங்கு அதிகம் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதாகவும்
தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுள் 20% பேருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டதாகவும் ஆய்வு முடிவில் தெரிவித்திருந்தது.
💉 இந்த தடுப்பூசியின் ப்ராக்டிகல் சிக்கல்கள் என்ன???
இந்த தடுப்பூசியி்ல் RNA எனும் மெல்லிய மரபணுக்கூறுகள் இருப்பதால் இவற்றை
அதி உறை குளிர்( Ultra freezing cold environment ) சூழ்நிலையில் பாதுகாக்க வேண்டும்
மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் குளிரில் வைத்திருந்தால் ஆறு மாத காலம் வீரியத்துடன் இருக்கும்
மைனஸ் 20 டிகிரிக்கு குறைந்தால்
பதினைந்து நாட்கள் மட்டுமே வீரியத்துடன் இருக்கும் ( மைனஸ் இருபது டிகிரி என்பது நமது ஃப்ரிட்ஜில் இருக்கும் டீப் ஃப்ரீசரில் நிலவும் குளிர்)
2 முதல் 8 டிகிரியில் ஐந்து நாட்கள் மட்டுமே வீரியத்துடன் இருக்கும். ( இது நமது ஃப்ரிட்ஜில் நிலவும் குளிர் )
இந்த எட்டு டிகிரிக்கு மேல் சில நிமிடங்கள் இருந்தாலும் தடுப்பூசி வீரியத்தை இழந்து விடும்.
இது குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ மருத்துவமனையின் முக்கிய மருத்துவர் கருத்து தெரிவிக்கும் போது
" இத்தகைய உறை குளிரில் மைனஸ் எண்பது டிகிரியில் வாக்சினை பராமரிக்கும் வசதி இங்கு மேயோவில் கூட கிடையாது. இங்கே இல்லை எனும் போது அமெரிக்காவில் வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை" என்கிறார்
இந்த தடுப்பூசியை கண்டறிவது சவால் என்றால்
அதை முறையாக பராமரித்து
உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து
அதை உபயோகப்படுத்தும் இடம் வரை வீரியத்தை இழக்காமல் கொண்டு சேர்ப்பது வளர்ந்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளுக்கே பெரிய சவாலாக அமையக்காத்திருக்கின்றன
💉 இந்த தடுப்பூசி எப்போது வெகுஜனப்புலக்கத்துக்கு வரும் ???
தற்போது மிக குறைந்த அளவிலேயே இந்த தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது
FDA அனுமதி பெற்றவுடன் இந்த வருட இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இயலும்
அடுத்த வருட இறுதிக்குள்
103 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இயலும் என்று ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளது.
ஒருவருக்கு இரண்டு ஊசிகள் தேவை என்பதால்
இந்த வருட இறுதிக்குள் இரண்டரை கோடி பேருக்கு மட்டுமே இந்த தடுப்பூசி கிடைக்கும்.
இப்போதே பிரிட்டன் - மூன்று கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்து காத்திருக்கிறது.
அமெரிக்காவில் இந்த தடுப்பூசியி்ன் விலை
$19.50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது அதன் விலை இன்னும் சற்று அதிகமாகும்.
ஒரு தடுப்பூசியின் விலை ₹1500 முதல் ₹2000 வரை இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி அடுத்த வருடத்தின் மத்தியில் அல்லது கடைசியில் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கிடைக்கலாம்.
அதற்குள் வேறு சில விலை குறைந்த, எளிதாக பாதுகாக்க முடிந்த தடுப்பூசிகள் நமக்கு கிடைத்திருக்கக்கூடும்.
இப்போதைக்கு அமெரிக்கா , பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளில் வாழும்
மருத்துத்துறை ஊழியர்கள் , வயது முதிர்ந்தோர், பணம் படைத்தோர் இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
⛔மைனஸ் எண்பது டிகிரி உறை குளிரில்
பராமரிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்
⛔இந்தியா போன்ற பெரிய நாட்டுக்குத் தேவையான உற்பத்தி
அதனை இறக்குமதி செய்தல் மற்றும் அதனால் ஏறும் விலை
இவை இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.
இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகைக்கு எளிதில் கிடைக்கும் விலையில்
அரசாங்கங்கள் எளிதில் வாங்கி மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் வகையில்
எளிதான முறையில் பாதுகாப்பு செய்யும் வசதிகளுடன் இருக்கும் தடுப்பூசிகளே நம் நாட்டில் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்.
எனினும் மருத்துவ அறிவியல் மற்றும் உயிர் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு
இத்தனை வேகமாக ஒரு பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசியைக் கண்டறிந்துள்ள
ஃபைசர் மற்றும் ப்யோ என்டெக் நிறுவனத்துக்கும் பூங்கொத்துகள்.
💐💐💐
தொடர்ந்திருப்போம்.
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later