மறதி என்பது வியாதி அல்ல
மறதி..🌹
எனக்கு வயது 70 ஆகிறது. ஸ்டேட் பேங்கில் பணி செய்து ஓய்வு பெற்றவன். பலர் ஓய்வு பெற்ற பின்னும் பணி செய்கிறார்கள். போதும் என்று தோன்றியது. குழந்தைகள் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்கள். பாங்கில் இருக்கும் பணம் எனக்கும் என் மனைவிக்கும் இன்னும் இருபது வருடங்களுக்கு மேல் உதவும்.
வயோதிகத்தின் கோளாறால் வரும் சில தொல்லைகளில் ஒன்று மறதி. எழுத்தாளர் சுஜாதா எழுதி இருந்தது போல் அடுத்த அறைக்குச் சென்ற பின் எதற்கு வந்தோம் என்று யோசிப்பேன். வெகு நேரம் நினைவிற்கு வராது.
வாழ்க்கையை அப்படியே எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு. ஆனால் இந்த மறதியினால் நான் படும் கஷ்டம் கொஞ்சம் அதிகம் தான்.
மனைவி காய்கறி வாங்க லிஸ்ட் கொடுத்து அனுப்புவாள். கருவேப்பிலை கொத்தமல்லி கடைசியில் வாங்கலாம் என்று முடிவு செய்து கடைசியில் வாங்காமலே வந்து நிற்பேன். மனைவியிடம் திட்டு வாங்கி கட்டிக் கொள்வேன்.
சமாளிக்க “எல்லாம் நன்மைக்கே” என்று சொல்லுவேன்.
“எது, கருவேப்பிலை கொத்தமல்லி வாங்கி வராமல் இருப்பது நல்லதா?” என்று கேட்டு முறைப்பாள் என் மனைவி.
" அதற்கு என்ன, சாயந்திரம் வாக்கிங் போய் வரும் பொழுது தெரு மூலையில் கீரைக்காரி பச்சென்று கீரையுடன் கருவேப்பிலை கொத்தமல்லியும் கொண்டு வருவாள். வாங்கி வருகிறேன்" என்று சொல்லி சமாளிப்பேன்.
ரிட்டயர் ஆன பொழுது வந்த கிராஜுவிட்டி மற்றும் லீவ் என்கேஷ்மெண்ட் மூலம் வந்த பணத்தோடு கையில் வைத்திருந்த சேமிப்பையும் சேர்த்து ஒரு வீடு வாங்கி இருந்தேன். அதை வாடகைக்கு விட்டு இருந்தேன். சமீபத்தில் குடியிருந்தவர் வேறு இடம் சென்றுவிட புதிதாக ஒருவர் வந்து இருந்தார். அவர் கொடுத்த இரண்டு லட்ச ரூபாய் அட்வான்ஸ் ரொக்கமாக என்னிடமிருந்தது.
மார்பிள் பிசினஸ் செய்பவர் அவர். செக்கிற்கு பதிலாக ரொக்கமாக வாங்க சொல்லி வற்புறுத்தவே வாங்கிக் கொண்டேன்.
இன்று அதை பாங்கில் கொண்டு போட வேண்டும்.
"ஜாக்கிரதையாக எடுத்துச் செல்லுங்கள். எங்கும் நிறுத்தாமல் பாங்கிற்கு சென்று டெபாசிட் செய்யுங்கள்" என்று திரும்பத் திரும்பச் சொன்னாள் மனைவி.0
தலையாட்டிவிட்டு பேங்க் பாஸ்புக் எடுத்து கைப்பையில் போடச் சென்ற பொழுது பேலன்ஸ் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மற்றொரு கையில் இருந்த பணத்தை மேஜை மேல் வைத்துவிட்டு பாஸ்போக்கில் வரவு செலவுகளை நோட்டம் விட்டேன்.
"வெயில் அதிகமா இருக்கிறது மோரு சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்" என்று சொல்லி ஒரு கோப்பை மோரை கொடுத்தாள் என் மனைவி. அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து மோரை குடித்து தாகத்தை குறைத்து கொண்டேன்.
20 நிமிடத்தில் பேங்க் வாசலின் முன் சென்று ஸ்கூட்டரை நிறுத்தினேன். கைப்பையை எடுத்துக்கொண்டு பேங்க் வாசலை நோக்கி சென்றேன். திடீரென்று ஸ்கூட்டரில் வந்த இருவர் ஷண நேரத்தில் என் பையை பிடுங்கி கொண்டு பறந்தனர். அதிர்ச்சியில் செயலிழந்து நின்றேன் நான்.
" கடவுளே இது என்ன சோதனை. தினம் தினம் உன்னை வேண்டுவதெல்லாம் வீணா? இரண்டு லட்சம் என போன்றோருக்கு மிகப்பெரிய தொகை ஆயிற்றே. மனைவிக்கு என்ன பதில் சொல்வேன், அவள் எத்தனை வேதனைப்படுவாள்?
எனக்கு நேர்ந்ததைக் கண்ட அருகில் இருந்த சிலர் ஓடி வந்தார்கள்.
"என்ன சார் பையில் இருந்தது, பணமா?" என்று கேட்டார்கள்.
" ஆமாம் இரண்டு லட்சம்" என்றேன் உடைந்த குரலில்.
" பக்கத்துலதான் போலீஸ் ஸ்டேஷன், உடனே சென்று கம்பளைண்ட் கொடுங்கள்" என்றார் ஒருவர்.
எதுவும் செய்யத் தோன்றாமல் மனைவியை கலந்து ஆலோசிக்க ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தேன். சட்டைப் பையில் இருந்த கைபேசியில் மணி அடித்தது.
எடுத்துப் பார்த்தேன். மனைவிதான்.
ஹலோ என்றேன் நடுங்கும் குரலில்.
" என்ன பணம் கட்டியாச்சா?" என்று கேட்டாள் அவள்.
" இல்ல... வந்து" என்று சொல்லி தடுமாறிய பொழுது அவளின் உயர்த்த குரல் மீண்டும் ஒலித்தது.
" என்ன வந்து போயின்னு. இப்படி மறதி இருந்தா எப்படி குடும்பம் நடத்துவது? எத்தனை தடவை இந்த வெயிலில் போவீங்க? பணத்தை மேஜை மேலயே வைத்துவிட்டு போய் இருக்கீங்களே" என்றாள் அவள்.
" தெய்வமே நீ இருப்பது உண்மை" என்றேன் உரத்த குரலில்.
" என்ன சார் ஆயிற்று?" என்று கேட்டார் ஒருவர்.
" எல்லாம் நன்மைக்கே, மறதியும்தான்" என்றேன் நான்.
" பாவம், பணம் போனதில் சாருக்கு ஏதோ ஆகிவிட்டது" என்று சொல்லி நகர்ந்தார் அவர்.😃
எமது நல்ல கருத்துக்கள் Groupல் இணைந்து கொள்ள விரும்புவர்கள் இந்த லிங்க் மூலம் இணைந்து கொள்ளலாம்
இதை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள். ..
நீங்கள் பயனடைந்து போல் உங்கள் உறவுகளும் பயனடையட்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later