யூனிவேர்சிட்டி போகும் முன் வாசிக்கவும்
பல்கலைக் கழகம் போக முன் ஒருதடவை இதை வாசியுங்கள் !
வெட்டுப் புள்ளி வந்து உள்ளது. பல்கலைக் கழகம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் இப்போது என்ன செய்யவேண்டும்?
வாழ்கையின் முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளீர்கள். இப்போது குடும்பத்தின் கண்காணிப்பிலிருந்து தூரப்போய் விட்டீர்கள். பிள்ளை பல்கலைக் கழகம் போய்விட்டான் என அப்பா அம்மா இனி கவனிக்கப்போவதில்லை.
ஆனால் இப்போது நீங்கள் எடுக்கும் முடிவுகள்தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது.
கொண்டாட்டம் ஒரு புறம் இருக்க மறுபக்கம் உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள்.
எதிர்பார்த்த பீடம் கிடைக்கவில்லையா?
கவலை வேண்டாம்.
கிடைத்த பீடத்திலேயே எதிர்பார்த்ததைவிட அதிகம் சாதிக்கலாம்.
நீங்கள் இப்போது வளர்த்துக்கொள்ள வேண்டிய இரு முக்கியமான விடயங்கள் கணணி அறிவு மற்றும் ஆங்கில அறிவு.
எனக்கு இது சரிவராது என பயப்படாமல் துணிந்து படியுங்கள்.
அடுத்து நீங்கள் தெரிவான துறையில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை வாசியுங்கள். அந்தத் துறையில் Phd செய்தவர்கள் செய்த ஆய்வுக்கட்டுரைகளை வாசியுங்கள். புரியாது விட்டாலும் பல முறை வாசிக்கும் போது ஒரு ஆய்வுக் கட்டுரை எப்படி எழுதுவது என ஒரு ஐடியா வரும்.
உங்கள் பல்கலைக்கழகம் தொடங்கியதும் ஒவ்வொரு விடயத்தை படிக்கும்போதும் இந்த விடயத்தைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினா எப்படி இருக்குமென யோசியுங்கள். ஏதோவொரு விடயம் பிடிக்கும். அது பற்றி ஆய்வுக் கட்டுரை எழுத தொடங்குங்கள்.
உங்கள் பீடத்தின் அறிவுப்புப் பலகையை அடிக்கடி பாருங்கள். அதிலே ஆய்வு மாநாடுகள், ஆய்வுப் புத்தகங்கள் பற்றிய அறிவுப்புக்கள் இருக்கும். அவற்றிலே கலந்து கொள்ளுங்கள். உங்கள் ஆய்வுகளை அனுப்பி வையுங்கள்.
அடுத்ததாக நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டியது தலமைத்துவ பண்பும், துணிந்து உரையாடும் தன்மையும். நம் மாணவர்களுக்கு இருக்கும் பெரிய பலவீனம் பயம்.
அந்த பயத்தாலேயே நிறையப் பேருக்கு கதைக்கவே தெரியாது.
உயர்தரத்திலே அகில இலங்கை ரீதியில் சாதித்து இருப்பான். அவனது பேட்டி பார்த்தால், " எனது பெயர் ராஜா. நான் யாழ்ப்பாணத்திலே சுன்னாகம் பெரிய பிள்ளையார் வீதியில் 12 ஆம் இலக்க வீட்டிலே பிறந்து வளர்ந்தேன். எனது அப்பா பெயர் ராகவன். என்னை கஸ்டப்பட்டு படிக்க வச்சார். எனக்கு உதவிய ஆசிரியர்களுக்கு நன்றி" அதாவது ஐந்தாம் வகுப்பு பிள்ளை சுயசரிதை எழுதுறது போலதான் உயர்தரம் வென்ற நிறையப் பிள்ளைகளும் உரையாடும்.
இனி இந்தவகை உரையாடல் உங்களுக்கு உதவாது. தொழில் போட்டியில் உரையாடல் விதம் முக்கியம். எவ்வளவு திறமை இருந்தாலும் நேர்முகத் தேர்வை சரியாக செய்யாது நடுங்கி நடுங்கி பேசினால் வேலை கிடைக்காது.
ஆகவே உங்களுக்கென ஒரு உரையாடல் பாணி, எழுத்துப்பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு "
`நான் ராஜா , சுன்னாகத்தில் பிறந்தேன் . என்ட அப்பா ராகவன்தான் கஸ்டப் பட்டு என்னை படிக்க வைத்தார். ஒரு மாணவனின் வெற்றிக்கு பெற்றோருக்கு அடுத்ததா ஆசிரியர்கள்தானே. எனக்கு மட்டும் இது விதிவிலக்கா இருந்திடுமா? என் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் ` இப்படி ஒரு போட்டி கொடுத்தால் எப்படி இருக்கும்? பாரம்பரியமாக ஒரே பாணியை பயன் படுத்துவதை விட்டு உங்களுக்கு என ஒரு பாணியை உருவாக்குங்கள்.
அடுத்தது, பேச , எழுத வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இது எனக்கு சரிவருமா? என்று பயப்படாதீர்கள் . துணிந்து செய்யுங்கள். விடுமுறை நாட்களில் உங்கள் பாடசாலை ஆசிரியர்களோடு பேசி மாணவர்களுக்கு படிப்பியுங்கள். ஏதாவது செய்துகொண்டே இருங்கள். சமூகத்துக்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்துகொண்டே இருங்கள் அதுதான் உங்கள் தலைமைத்துவ பண்பை வளர்த்து எடுக்க சிறந்த வழி . அது உங்களை மற்றவர்கள் முன் தலை நிமிர்ந்து பேசும் துணிச்சலை தரும். அந்த துணிச்சல் வந்தால் போதும் எந்த நேர்முகத் தேர்வையும் இலகுவாக வெல்லலாம்.
அடுத்து பல்கலைக் கழகம் போனால் சரி எப்படியும் பட்டம் கிடைத்து விடும் சந்தோசமாக இருங்கள் என்பார்கள். நம்பி விடாதீர்கள். பல்கலைக் கழகத்திலும் பரீட்சை முடிவுகளில் தரம் பிரித்தல் இருக்கிறது. முதல் வகுப்பில் சித்தி பெற்றால் பல வாய்ப்புக்கள் தேடிவரும். உதாரணத்திற்கு, ஒரு பாடத்திற்கு விரிவுரையாளர் தேவை என்றால், அதற்கான நேர்முகத் தேர்வில். அந்த பாடத்தில் முதல் வகுப்பில் அதி திறமையோடு சித்தி பெற்றவர்களே முதலில் தேர்வுக்கு உட்படுத்த படுவார்கள். அதுமட்டுமல்ல முதல் வகுப்பில் சித்தி பெறும் போது பல வாய்ப்புக்கள் தேடிவரும்.
உதாரணத்துக்கு , ஒரு பொறியியல் மாணவன் முதல் வகுப்பில் நல்ல புள்ளியுடன் சித்தி பெற்றால் நேரடியாக பட்ட மேற்படிப்புக்காக அமேரிக்கா போன்ற நாடுகளிலேயே இலவச புலமைப் பரிசில் பெற்று செட்டில் ஆகலாம்.
அடுத்து பட்டம் பெற்ற பின் என்ன செய்வதென இப்போதே தீர்மானியுங்கள்.
உதாரணம் ஒரு கலைப்பட்டதாரி பட்டம் பெற்ற பின் அரசாங்க வேலை பெறுவதுதான் நோக்கம் என்றால், இப்போதே பொது அறிவு புத்தகம் வாங்கி பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நுண்ணறிவு முக்கியம். நுண்ணறிவு நூல்களை வாங்கி இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக செய்து பழகினால் வேலையில்லா பட்டதாரி என்ற நிலைக்கு வரவேண்டி வராது. எந்த அரசியல்வாதியின் பின்னாலும் அலையாமல் சுயமரியாதையோடு வாழலாம்.
கொஞ்ச ம் மினக்கெட்டால் , இலங்கை நிர்வாக துறை பரீட்சை பாஸ் பண்ணி அமைச்சின் செயலாளர் வரைகூட உயரலாம்.
அடுத்து மேலதிக கல்வித் திறமைகளை வளர்ப்பதற்கான வாய்ப்புக்களை தேடுங்கள்.
உதாரணம், பணம் இருப்பவர்கள் தனியார் பல் கலைக் கழகத்தில் பகுதி நேரமாக சட்டம் படிக்கலாம். CIMA போன்ற கற்கைகளை முடிக்கலாம்.
ஆக, இனிதான் நீங்கள் செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கிறது. என்ன செய்வது என தேடுங்கள். எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென இப்போதே திட்டமிடுங்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later